நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொஞ்சம் தனிமையும், கொஞ்சம் காதலும்... தலைப்புகள் ஏதும் கொடுக்கவில்லை... புதுமைக்காக அல்ல... தலைப்பு இருந்தால்தான் கவிதை புரியுமா என்ன? :)
@@@@@ @@@@@ @@@@@ @@@@@ @@@@@ @@@@@ @@@@@
எண்ணங்களை எழுத்தாக்க
எடுத்த எழுதுகோலை
திரும்பவும் கீழே வைத்தேன்
“வெற்றுத்தாளை” விட
எந்த வார்த்தை
துல்லியமாய்ப் பிரதிபலிக்கும்?
என் மனதை...
@@@@@
தனிமை வானின் மோனத்தவம் விடுத்து
சிறகடித்த பறவையே
உன் சிறகுகள் பிய்த்தெரியப்படுகின்றன.
திரும்பிச்செல்...
@@@@@
கடலலை போல
ஆர்ப்பரிக்கும் எண்ணங்கள் விடுத்து
இதயத்தின் ஆழத்திற்கு
அமைதியை எடுத்துச் செல்லவே முயலுகின்றேன்...
எங்கே கிடைக்கும்?
பரிவில்லாப் பாசமும்
காதலில்லாத அன்பும்
ஆசையில்லாத விருப்பமும்
நட்பில்லாத சிநேகமும்
இரக்கம் இல்லாத கருணையும்.
@@@@@
பின்வரும் நாளில்
நான் இருப்பேனோ?
நிச்சயம் நிலா இருக்கும்
நம்பிக்கையில்
நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறேன்...
@@@@@
சுய நலங்கள் துடுப்பு வலிக்கும்
பாய் மரக்கப்பல் பயணம் விடுத்து
நடுக் கடலில் தத்தளிக்கும் என்னை - உன்
இருகரம் கொண்டேந்தி வாழ்க்கைக் கரைசேர்.
@@@@@
தன் குளிர்ந்த கதிர்களால்
என்வெம்மை தணிக்கவியலாமல்
உன்னைத் தேடி ஓடி
வரும் நிலவு...
சுட்டெரிக்கும் சூரியனையும்
ஒருநாள் ஆட்கொள்ளும் அதன்
தண்மை
என்பொருட்டு பொய்த்துப்போனதை
எடுத்துக்கூறி உன்னை அழைத்ததா?
இன்னும் தாமதமேன்...
விரைந்து வா!...
@@@@@
போ என்றால் போவதுமில்லை - பின்னர்
வா என்றால் வருவதுமில்லை
மெல்லிய காற்றுவீச்சில் கொட்டும் மழை
@@@@@
கொத்திக் கொத்திப் பூச்சியுண்ணும்
மரங்கொத்தி போல என்
மனம் கொத்திப் போகும்
மாயப் பறவையாய் நீ...
@@@@@
அலுப்பூட்டும்
என் உரையாடலை
நிறுத்தும் பொருட்டு வந்தமர்ந்த
முற்றுப்புள்ளியாய் உன்
முத்தம்...
பின் வந்த
என் சொற்கள் எல்லாம்
எங்கோ
திரியத்துவங்கியது
திக்கற்று.
@@@@@
இரவை விரட்டிச் சென்ற
சூரியன் எழும் வேளையில்
மனக்கடலில் இருந்து வெளிவரும்
உன் முகம்
பிரபஞ்சத்தையே மறைக்கிறது.
உன் விழிச்சுடரில்
மிதந்து கொண்டிருக்கிறேன் நான்.
உன் இறகு கொண்டு
என்னை அணைத்து கொத்திச்செல்வதாய்
கனவுகண்டு மயங்குகிறேன்.
மேற்கில் விழுந்த சூரியன்
மறைவதற்குள் வந்தென்னைக்
கொத்திச்செல்.
@@@@@
அடைமழை கொட்டும் ஒரு சாயங்காலம்.
நீ அருகிலற்று நான் மட்டும் தனித்து.
மழையோடை எடுத்துவருமா?
நீ பாதி குடித்த சிகரெட்டை...
சாரல்களிடம் சொல்லியனுப்புகிறேன்
உன்னை இழுத்துவரச் சொல்லி...
ஆசையாய் உன் கன்னம்தொடும்
சின்னத்துளியை உதறிவிடாதே...
அவை என் முத்தங்களால் நிரப்பப்பட்டு
உனக்கு அனுப்பப்பட்ட அஞ்சல்.
@@@@@
தாமதமாகவே வருகிறேன் - நீ
காத்திருந்த கோபத்தில் - என்
காதுபிடித்து திருகுவாயே என்று.