கவிதைகளை சுவாசித்து வெகுநாட்களாகிவிட்டது. நேரமில்லை என்ற ஒரு பொய்யான காரணத்தை கூறிக்கொண்டு மனம் ஆறுதல் அடைகிறது... கொஞ்சம் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் கவிதைகள்....
-----
உன்னைப் பார்க்கவேண்டுமென
என் இமைகள் படபடக்கிறது
பார்த்தவுடன்
உன்னைத் தொட நீளும்
எனது கரங்களை
சட்டெனப் பின்னோக்கி
இழுத்துக்கொள்கிறேன்
மூச்சுக்காற்று என்வரவைச்
சொல்லி விடுமென்று
உள்ளிழுத்துக்கொள்கிறேன்
உன்னைக் காணும் போதெல்லாம்
பயமாயிருக்கிறது
பட்டாம் பூச்சியே....
பறந்துவிடுவாயோ என்று....
-----
யார் தொடங்க?
யார் முடிக்க?
ஒரு வழியும் தோன்றவில்லை.
எது நியாயம்?
எது பாவம்?
இதுவரைக்கும் கேள்வியில்லை
விலை கொடுத்துப்
பெற இயலாததுதான்
அனுபவம் அதற்காக
எத்தனை இழப்புகள்?
இழப்பதற்கென்று
இனி எதுவுமில்லை
இங்கு.
-----
மழை நாளில்...
கம்பிகள் அறுந்த குடையுடன்
அவதியுறும் என்னை
சற்றுநேரம் உற்றுநோக்கியது
முழுவதும் நனைந்த காகம்...!
-----
சுட்டமரத்தினுள்
கருகிய குஞ்சுகளுக்காக
வட்டமிடும் பறவையின்
சிறகுகள் சிதறுகிறது...
பொறுக்கு பொறுக்கு
காது குடையலாம்.
(மனித மனம்)
-----
சுலபமாய் உள் நுழையும்
விசயங்கள் பல...
திரும்ப எடுக்க
எத்தனிக்கையில்
சல சல சத்தமும்
சங்கடங்களும்
மனம் ஒரு உண்டியல்...
நிரப்புவது சுலபம்
எடுப்பது கடினம்.
-----
விழுதுகள்
வேர்களை அசைத்துபார்க்க முயலும்
நிச்சயமற்ற வாழ்வு பற்றிப்பேச
வார்த்தைகள்
வசப்படுவதில்லை
இருப்பினும்
இதோ என்
இதயரேகை சொல்கிறது
உலகம் என்னைவிட்டு
தொலை தூரம்
சென்றுகொண்டிருக்கிறது
கடைசி நாட்களில்
காலம் என்மீது
கருணை கொண்டு
என்னோடு சிநேகிக்க
பலரை முளைக்கச்செய்கிறது.
காலத்திடமும்
கடவுளிடமும்
ஒரு வேண்டுகோள்
மீண்டும் ஒரு ஜனனம் மரணம் வேண்டாம்
வாழ்வதும் சாவதும் ஒருமுறைதான்
அவரவர் விதியை
அவரே எழுதுகோல் கொண்டு
எழுதவிடு
இறைவா!...
-----
மனச்சலனங்களுக்கு
இடம்கொடுக்காத
வாழ்க்கை
சராசரி மனதர்களாய்
வாழும் நம்மில்
எத்தனைபேருக்கு
வசப்படும்?
-----
கடவுளை மனிதன் நம்புகிறான்
கடவுள் மனிதனை நம்பவில்லை
நம்பியிருப்பின்
படைத்திருக்கமாட்டான்
மனசாட்சியை!
-----
இமைகள் மூடியது தெரியும்
மனம் தூங்கியது எப்போது?
1 comment:
//இமைகள் மூடியது தெரியும்
மனம் தூங்கியது எப்போது?//
அருமை யாளினி.வாழ்த்துகள்.
பெயர்களையும் தமிழில் தெரியுமாறு மாற்றினால் நன்றாக இருக்கும்.
Post a Comment