இந்த முறை என் கவிதைகள்தான்…. படிக்கும் யாரும் அதிக எதிர்பார்ப்பினை வைத்துக்கொள்ள வேண்டாம்…. ஏனெனில் கவிதைகளின் வரையறைகளைக் கொண்டு அமைந்தது அல்ல எனது கவிதைகள்… இருந்தாலும் கவிதை போன்ற ஒரு மாயத்தோற்றத்தைக் கொடுக்கும் எனது வரிகள்…. எப்படியிருக்குன்னு சொல்லுங்க….
இதோ...
பாரதி சொன்னான்
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும்
அஞ்சா ஞானச்செருக்கு...
அம்மா சொன்னாள்
தலைகுனிந்த நடை
நிலம்பார்க்கும் பார்வை
காரணம்...அக்கம் பக்கத்தாருக்கு
அஞ்ச வேண்டுமாம்
ஏன் பாரதியே?
உனக்கும் என் அம்மாவிற்கும்
இத்தனை முரண்பாடு!
(இது எனது முதல் கவிதை)
-----
தொடக்கத்தின் ஆரம்பம் முற்றுப்புள்ளி தான்
ஆரம்பித்த அனைத்துமே முடிவுகள்தான்
-----
மறக்கத்தான நினைக்கின்றேன்
மாறுதலாய் (மறக்க நினைப்பதை)
மலர்ந்து விடுகின்றன
நீ கைதொட்ட பொருள்களைக்
காணும் பொழுதெல்லாம்
உன் நினைவுகள்
(அடைப்புகுறியை நீக்கி பிறகு வரும் 4 வரிகளையும் நீக்கிவிட்டால் ஒரு குட்டி ஹைக்கூ)
-----
உன்னை நேசித்தது என்தவறுதான்...
என்னை யோசிக்க வைக்காதே...
அதற்காக நான் யாசிக்கிறேன்...
உனக்காக விட்டுக்கொடுக்கவில்லை
என் உள்ளத்திற்காக விட்டுக்கொடுத்தேன்
உண்மையை
(இறுதி 3 வரிகள் தேவையே இல்லைதான், இருந்தாலும் எழுதிவைத்ததை திருத்த மனம் இல்லாததால் அப்படியே உங்கள் பார்வைக்கும்)
-----
எண்ணத்தில் ஏதோ ஒன்று
எழுத்தில் இல்லை
உள்ளத்தில் ஏதோ ஒன்று
உண்மையில் ஏதுமில்லை
உணர்வுகளுக்கு எல்லாம் இருக்க!
உலகத்திற்கு மட்டும் எதுவுமே இல்லாமல்!!
(ரொம்ப யோசிக்க வேணாம், நான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன், கவிதை மாதிரின்னு…. அதான் ஒன்றுமே இல்லை)
-----
கற்பனை வாழ்க்கையின்
கனவுப் பாத்திரங்களுடன்
கைகோர்த்து வரும் எனக்கு
நிஐத்தின் நிழல்கள் கூட
நிரந்தரமற்றது என புரிகிறது
-----
நீ இலக்கணம் மீறிய இலக்கியம்
மட்டுமல்ல
மரபு மீறிய புதுக்கவிதையும் கூட
-----
பாசமா? வேசமா?
புரியாத புதிர்களாய்
என் உறவுகள்
என்னுள் இருப்பது பாசமா?
தெரியவில்லை
நிச்சயமாய்வேசமில்லை.
-----
விதியை மதியால்
வெல்ல முடியாவிட்டாலும்
சிரிப்பால் வெல்கிறேன்
என்னைப் போய் பைத்தியம்
என்கிறார்கள்.
-----
வார்த்தை நகங்களால்
கீறப்பட்ட இதயங்களுக்கு
எத்தனை முறைதான்
ஒத்தடம் கொடுப்பது
-----
நான் எழுதிய
ஒவ்வொரு கவிதையையும்
விதி வந்து திருத்துகிறது
ஒரு போதும்
என்னைக் கேட்டதில்லை
-----
நானும் ரோஜா செடியும்
ஒன்றுதான்
சந்தோஷமாய்
மலரும் மலர்களை விட
சோகமாய் மலரும்
முட்களே அதிகம்
-----
இங்கு
ஒவ்வொருவருக்கும்
முகமூடி
ஒன்றல்ல
ஆயிரக்கணக்கில்
-----
மனசாட்சிகளை கொன்றுவிட்ட
மனிதர்களின் மத்தியில்
ஆயிரம் கவலைகளுடன்
கொஞ்சம் ஆறுதல் தரும்
வார்த்தைகளை தேடி
-----
மனிதனுடைய வேலை
வாழ்வது
உயிரோடிருப்பது அல்ல
உயிரோடிருக்கிறோம்
வாழ்கிறோமா?
-----
நட்பை அமைதியின் கருவியாக்கு
எங்கே வெறுப்பு தோன்றுகிறதோ
அங்கே அன்பை விதை
எங்கே மனப்புண் ஏற்படுகிறதோ
அங்கே மன்னிப்பை விதை
சந்தேகம் உள்ளபோது நம்பிக்கையையும்
சஞ்சலம் தோன்றுமிடத்து நல்ல எண்ணத்தையும்
இருள் சூழும் இடத்தில் ஒளியையும்
துயரத்தில் மகிழ்வின் விதைகளையும்…
-----
புரியாத உலகில்
தெரியாமல் வந்து விட்டேன்
புரியாத புதிர் தேடி ஓடுகிறேன்
புரிகிறது எனக்கு
தெரியாதவன் வந்து இருள்போடுகிறான்
திகைக்கிறேன், தெளிகிறேன்
மாய ஒளியினின்று இருளுக்கே மீள்கிறேன்
(இந்த கவிதை கொஞ்சம் குழப்பும், வாழ்கையையும், சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ளாமல் அதிலிருந்து தப்பிக்க வழி தேடுவது. வழி – மரணம்)
-----
தற்கொலையை முயற்சிப்பதில்லை
ஏற்கனவே இறந்துவிட்டேன்
கொல்வதற்கு ஏதும் மிச்சமில்லை
சம்பிரதாயமாய் இறந்து
சாசுவதமாய் வாழப்போகிறேன்
(மேலே இருக்கிற கவிதையை கேள்வியாகவும், இதை பதிலாகவும் நினைத்தால் இரண்டுமே கொஞ்சம் புரியும்)
-----
அடர்ந்த மரநிழல்களின் இருளாய் மனம்
நடக்கும் பாதைகள் கரடுமுரடானவை
அச்சுருத்தும் விலங்குகள் உறவுகள்
எதிர்வரும் தனிமை இத்தனையும்
கடந்து நடக்கையில்
சுகந்தம் தரும் மலர்களும்
நிச்சயம் வாழ்க்கை என்பது காடு…
பனி விழும் மலர் வனம்…
(கடைசி வரி பிடிச்ச பாட்டில் இருந்து சுடப்பட்டது)
-----
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்,
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்,
இலைகளுக்கும், உனக்கும், எனக்கும்
உலகில் உள்ள எல்லோருக்கும் ஒரே காற்று...
கடந்து செல்லும் காற்றில்
கவனமாகப் பதிவு செய்துஅனுப்புகிறேன்
நமக்குள் சமரசம் வேண்டி...
உன்மீதான என் அன்பின்
உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற
வார்த்தைகள் எந்த மொழியில்?
நினைவில்லை என்றபோதிலும்
நிதானமாய்
நீ அளித்த பதில்களிலும் இருக்கலாம்...
பரந்து விரிந்த வாழ்கைக்கடலில்
புறக்கணிப்பின் தீவில்தனித்து
உலவிக்கொண்டிருந்த என்னைப்
பொருட்படுத்தாமல் கடந்து சென்ற
காலப்படகில் நீ மட்டும்தனித்து நின்றாய்...
இயல்பாகிவிட்ட வாழ்க்கையோட்டதில்
சுயத்தைத் தொலைத்த மனிதர்கள் வாழும்
இவ்வுலகில் யதார்த்தமாய் நீ...
பாலைவனத்தில் தண்ணீர் தேடிஅலையும்
பறவைக்கு வானம் கருணை கொண்டு
அனுப்பிய மழையானது
உன் வார்த்தைகள்...
இல்லாததற்கு இருப்புத்தருவதும்
இருப்புத்தந்தபின் மறுப்புத் தருவதுமான
என் எண்ணங்கள்
காய்ந்த சருகுபோல சலசலக்கும்...
சலனமற்ற தாடகத்தில்
எறியப்பட்டது கல்லானாலும்
அழகிய வளையங்களை ஏற்படுத்தி
வியப்புறச் செய்வதாய்
உன் எண்ணங்கள்...
உன் வார்த்தைகளின் படி
என் எண்ணங்களும்
உன் எண்ணங்களும்
இரயில் தண்டவாளங்களாய்தான்...
அதனை இணைக்கும்
இரும்புப் பாலங்களாய்
நம் நட்பு...
நமக்குள் எழும் சண்டைகளும்
அதன்பின்பான மௌனங்களும்
இரும்புப்பாலங்களுக்கு
இடையேயான இடைவெளிகள்தான்...
இடைவெளிகள் ஆயிரம்
இருப்பினும், தண்டவாளங்கள் தனித்து
இயங்குவதில்லை...
உன்மௌனங்களில்
உறைந்திருக்கும் வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்...
ஒற்றையடிப்பாதை வழிச்செல்லும்
காற்று என்னை
அழைக்கிறது அடிவானம் நோக்கி...
தொலைந்து போனதாய் எண்ணி
தேடும் முயற்சியில் என்னைத்
தொலைத்து விடும் முன்...
நீ, நான் என்பது எதுவுமில்லை இங்கு...
அன்பு ஆபத்தானது
இசையும் கூட அவசரமானது
இருப்பினும் உணர்ந்துகொள் - என்
இனிய நண்பனே...
நான் இன்னும் உனக்கு
அந்நியமாகவில்லை என்று.
(கங்கைக்கரைக் காற்று என் கவிதையை காதில் சொல்லியதா?)