August 04, 2007

ஹைக்கூ கவிதைகள்
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சில கணங்களை அப்படியே நமது பார்வைக்கு சிறிய வார்த்தைகளாலும், சில வரிகளிலும் எடுத்துதருவது ஹைக்கூ... மாலைப்பொழுது, மின்மினிப் பூச்சிகளின் சத்தம், பனி கிரீடம் கொண்ட புல், வசந்தகால மழை, ஆர்பரிக்கும் அலை, வானவில், முட்களுடன் ரோஜா, சுட்டெரிக்கும் சூரியன், பனி பெய்யும் மேகம், சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி, கடந்து செல்லும் காற்று, நிலவின் முழுப்பிம்பம், கண்சிமிட்டும் நட்சத்திரங்கள், துளிர்க்கும் மரம், என கவனித்து நோக்கும் பொழுது ஆயிரமாயிரம் ஹைக்கூ கவிதைகள் கிடைக்கும்...
இயற்கையோடு மட்டுமன்றி வாழ்க்கையின் சில கூறுகளையும், உணர்வுகளையும் மறைமுகமாக ஆறேழு வார்த்தைகளுக்குள் ஒளித்துக்கொண்டிருக்கும் கவிதைகள் என்னை ஆச்சரியப்பட வைக்கும். கவிதைகளை ரசிப்பவர்கள் அதிகம், அதை உணர்பவர்கள் மிகவும் குறைவு... ரசித்து உணரும் பொழுதுதான் ஒரு கவிதையின் மகத்துவம் புரியும். ஜப்பானிய மற்றும் சீன மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஹைக்கூக்களுடன் தமிழிலிருந்தும் சில...
புகைப்படக்காட்சிகளாக விரியும் வார்தைகளைப்பதிவு செய்த கவிஞர்களின் பெயர்கள் நான்படித்த நூலில் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருந்ததால் இந்த கவிதை இவருடையது என்று குறிப்பிடமுடியவில்லை.

நேற்று கிழக்கில்
இன்று மேற்கில்
கோடை மின்னல்
---
நீர் அருந்துகிறேன்
அருவியில் இருந்து எழும்
ஒலியைக் கேட்டுக்கொண்டே...
---
நீண்ட பகற்பொழுது
படகு பேசிக்கொண்டிருக்கிறது
கரையிடம் தான்...
---
எப்போதாவது மேகங்கள்
நிலாபர்க்கும் மனிதனை
ஓய்வுறச்செய்யும்...
---
பழைய கற்பூர மரம்
மணம் தரும் - ரம்பத்துக்கும்
ரம்பத்தால் அறுப்பவர்க்கும்...
---
நீரில் மிதக்கும் நாரை
கலையும் வரை கொத்தும்
நிலா பிம்பத்தை...
---
வண்ண விசிறி வியாபாரி
காற்றைச் சுமந்து செல்கிறான்
மூச்சுத்திணறும் புழுக்கம்...
---
ஒரு பயணி
அதுவே என் பெயராகட்டும்
இலையுதிர் கால மழைக்கு...
---
கவனித்து நான்பார்க்கும் போது
நாசுனியா மலர்கிறது
வேலியோரத்தில்...
---
மேன்மைமிகு மன்னர் முன்பும்
தொப்பியை எடுப்பதில்லை
சோளக்கொல்லை பொம்மை...
---
பெருமையடையாதே!
பௌர்ணமியின் முழுமையும்
ஓரிரவுக்குத்தான்...
---
உண்மை என்பது புலியைப்போல
ஆனால் கொம்புகள் உள்ளது
பசுவைப்போல ஆனால்
வால் இல்லாதது...
---
கண்ணிலிருக்கும் ஒரு தூசு ஆகாயத்தையே
மறைக்க இன்னொரு தூசு
பூமி முழுதும் படர்ந்துவிடுகிறது...
---
எல்லாவற்றையும் துறந்தபின்
இன்னும் உள்ளது இதயம்
பூவண்ணம் தீட்டியதாய்...
---
நகரத்து வாழ்க்கையில்
பணம் தேவை
பனியை உருக்கக்கூட!
---
மழை நாளில்
நான்கேட்டநூறு பாடல்களிலும்
கொளுத்தும் கோடை...
---
தொடுவான விளிம்பில்
மேல் நோக்கி விரையும்
நட்சத்திரம்!
---
ஒளி வீசும் சூரியன்
ஒளிந்து கொள்ள இடத்தை தேடினான்
பிம்பமாய்ச் சிரிக்கும் பனி...
---
ஆகாயம் அழகு
பூமி அழகு – ஆம்
என் கையில் ரொட்டித்துண்டு
---
மழை...
குடைபிடிப்போம் வா!
குடிசைகளுக்கு.
---
கால்கள் பட்டதும்
நொறுங்கும் வானம்
தேங்கிய மழைநீர்...
---
நாளைக்கும் இதே இடத்தில்
அமர்ந்திருப்பேன்
வா... வண்ணத்துப்பூச்சியே!
---
மாக்கோலம் சிதைந்தாலும்
நிரம்பி வழிகிறது
எறும்பின் வீடு...
---
பெஞ்சில் காத்திருக்கிறேன்
அந்த இரண்டாவது வேகக்காற்று
தோட்டவாயில் வழிவருமென்று...
---
புத்தாடைகள் அணிந்தாலென்ன...
நினைவிருக்கட்டும் - காக்கை கருப்புதான்
நாரை வெளுப்புதான்.
---
ஒற்றை மரக்கிளையில் காகம்
தனிமை தவமிருக்கிறது
அழகிய மாலைப்பொழுது...
---
போகிற வண்டிகளைப்
பொழுதுபோக்காய் எண்ணிப்
போய்விட்டது எனது வண்டியும்.
---
புற்கள் தலைகாட்டும்
மரமொட்டுகளும்தான்; இன்று
வசந்தமழை பொழிகிறது.

6 comments:

ராதா செந்தில் said...

//கால்கள் பட்டதும்
நொறுங்கும் வானம்
தேங்கிய மழைநீர்...//
அருமை.

velusamymohan said...

Ur Hikkoo s nice.

velusamymohan said...

Ur Hikkoo s nice.

velusamymohan said...

nice

velusamymohan said...

ur hikkoos nice

velusamymohan said...

Ur Hikkoo s nice.