June 12, 2007

கவிதை ரசனை

வாழ்க்கையின் சில கணங்களையும், மன உணர்வுகளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுவது கவிதைகள், சில கவிதைகளை வாசிக்கும் பொழுது நமது மனதின் ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் எண்ணங்களை சட்டென்று புரட்டிப்போட்டுவிடுகின்றன. ரசித்த கவிதைகள் உங்கள் ரசனைக்கும்....

துபாய்
கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்
காணப்போகிற மகிழ்ச்சி எனக்குள்
ரசித்து ரசித்து வாங்கிய பொம்மைகளோடு
காத்திருக்கிறேன் நெடுநேரமாக
வீடு நுழைந்த முகம் கண்டு
தொட்டுக் கொஞ்சி மகிழ நெருங்குகையில்
“யாரும்மா இவங்க?” என்கிறாள்
மழலை மொழியில் என் மகள்...

முரண்
முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற என்னைத்
தடுத்தவாறு சொன்னாள் அம்மா,
“அடிக்காதேடா... அதுகருப்பசாமிக்கு நேர்ந்துவிட்டது”

பக்தி
நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றும் மனசு....
எதை வேண்டி எப்படிப் பெறுவது?

படிக்காதவர்கள்
பசுவுக்கு உண்ணி பிடுங்கிக் கொண்டிருக்கும் அப்பா
ஆட்டுக்குட்டியை மடியில் போட்டு ஈத்திக் கொண்டிருக்கும் அம்மா
படித்ததில்லை “உயிர்களிடத்தில் அன்புவேண்டும்”

கவனத்திற்கு
கடந்து போகும் கால்களின்
பின்னாலெல்லாம் ஓடிஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு வாலாட்டிய படியே!

June 09, 2007

எனது வளைதளம் பற்றி

“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவனின் வாய்ச்சொல்லில் நம்பிக்கையும் பூவுலகினை பெருமளவு ஆக்கிரமித்துக்கொண்டு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கடலின் மீது கொண்ட காதலாலும் எனது இந்த வலைதளத்திற்கு நீருலகம் என்ற பெயர் வைத்துள்ளேனே தவிர இதற்கும் இதன் தலைப்பிற்கும் துளியும் சம்பந்தமில்லை.